நீலகிரி: மலைப்பூண்டு விவசாயிகள் இப்போ மகிழ்ச்சியில் இருக்காங்க. எதனால் என்று தெரியுங்களா?
நீலகிரி மாவட்டம் அதிக அளவில் விவசாயம் செய்யும் ஒரு மாவட்டமாக விளங்குகிறது. இங்குத் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் வெள்ளைப் பூண்டு விவசாயம் நடைபெறுகிறது.
மலை மாவட்டத்தில் மலைப்பூண்டு விவசாயம் செய்பவர்கள் அதிகமாக இருப்பினும் சிறந்த லாபம் ஈட்டாமலேயே இருந்தனர். ஆனால் சமீப காலமாக வெள்ளைப் பூண்டுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் பூண்டு சாகுபடி செய்வதில் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர்.
பனிப்பொழிவு காலத்திலும் நல்ல விளைச்சல் கிடைப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் பூண்டு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
தற்போது இந்த மலைப்பூண்டுக்கு நல்ல மவுசு இருப்பதால் அதிகளவில் விற்பனையாகிறது. முக்கியமாக கிராமப்புறங்களில் நான்கு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர். இதனால் நேரடியாக மக்களுக்கு செல்வதால் விரும்பி வாங்குகின்றனர். இது மலைப்பூண்டு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.