தஞ்சாவூர்: பூதலூர் கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் புகையான் தாக்குதலுக்கும் இழப்பீடு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (அக்.30), நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்திடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தண்டனை கால்வாயில் அமைந்துள்ள 7/23, 6/67, 6/68, 6/20, 7/90 ஆகிய 5 குமுளிகள் சுமார் 2,000 முதல் 2,200 கன அடி தண்ணீர் திறந்தால் மட்டுமே, மேற்கண்ட வாய்க்கால்களுக்கு தண்ணீர் கிடைக்கும். வைரப்பெருமாள்பட்டியில் அமைந்துள்ள தடுப்பணையை டிசம்பர் அல்லது ஜனவரியில் மட்டும் அடைத்து, தண்ணீர் வழங்க விதிமுறை இருப்பதால் 1,000 முதல் 1,500 கன அடி கல்லணைக் கால்வாயில் திறக்கும் போது, மேற்கண்ட குமுளிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.
இதனால் நாற்று விடும்போதும், நடவு பணியின் போதும், வடகிழக்கு பருவமழை பொய்க்கும்போது விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மேற்கண்ட குமுளிகளுக்கு தண்ணீர் தேவைப்படும் போதெல்லாம் கதவணையை மூடியோ அல்லது கல்லணையில் கல்லணைக் கால்வாயில், சுமார் 2,200 கன அடி தண்ணீர் திறந்தோ, நிரந்தர தீர்வு காண வேண்டும். டிசம்பர் கடைசி அல்லது ஜனவரி கடைசியில் மட்டுமே கதவணையை அடைத்து தண்ணீர் வழங்க முடியும் என்ற விதிமுறையையும் மாற்றி அமைக்க வேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பூதலூர் தாலுகா, ராயமுண்டான்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, நிரந்தர கட்டிடம் இல்லாமல் உள்ளது. பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. எனவே உடன் நிரந்தர கட்டிடம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தஞ்சை டெல்டாவில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் நிரந்தர கட்டிடம், உலர் களம், நெல் உலர்த்த பழுதில்லாத இயந்திரங்கள் வழங்குவதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு இயற்கையால் ஏற்படும் இன்னல்களில் இருந்து ஓரளவு காப்பாற்ற முடியும். எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி பொதுமக்களுக்கு குடிமனைப் பட்டா, அனுபவ நிலங்களுக்கு பட்டா கேட்டு, மாவட்ட ஆட்சியரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விண்ணப்பம் தரப்பட்டது.
இந்த மனுக்கள் அனைத்தும் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு இதுவரை மனுக்கள் வந்து சேரவில்லை என்று தெரிய வருகிறது. எனவே, பொதுமக்கள் வழங்கிய மனுக்களை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் அனுப்பி தகுதியானவர்களுக்கு பட்டா கிடைக்க உதவிட வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு மற்றும் பூதலூர் வட்ட எல்லைக்குட்பட்ட அடஞ்சூர், கழுமங்கலம், களர்பட்டி, அம்மையகரம், ஒரத்தூர், பூதலூர், கோவில்பத்து, பிரமன் பேட்டை, ஆவாரம்பட்டி, காங்கேயம் பட்டி, தொண்டராயன்பாடி உள்ளிட்ட கிராமங்களில் நடப்பு குறுவை பயிர் கடுமையான புகையான் பூச்சியின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது.
சில வயல்கள் அறுவடை செய்ய வேண்டுமா? என விவசாயிகள் நினைக்கும் அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு சுமார் 12 மூட்டைகள் மட்டுமே மகசூல் கிடைத்தது. ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் வரை செலவு செய்து, மகசூல் இழப்பால் பெற்ற கடனை செலுத்த முடியாமலும், வைத்த நகையை மீட்க முடியாமலும் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே, மேற்கண்ட கிராமங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.