தஞ்சாவூர்: ஆதிமூலமே என்று அழைத்த உடனே வந்து காத்திடுவார் கஜேந்திர வரதர். வேண்டும் வரங்கள் கொடுத்து காத்திடுவார் ஆதிமூலப்பெருமாள், கண்ணன் என்று அழைக்கப்படும் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் அமைந்துள்ள கஜேந்திர வரதர் என்று பக்தர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் அமைந்துள்ளது கஜேந்திர வரதர் கோயில். மூலவர் கஜேந்திர வரதர். இவருக்கு ஆதிமூலப்பெருமாள், கண்ணன் என்றும் பெயர் உள்ளன. அம்மன்: ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் என்று அழைக்கப்படுகிறார். தல விருட்சமாக மகிழம்பூ உள்ளது. தீர்த்தம் கஜேந்திர புஷ்கரிணி, கபில தீர்த்தம் ஆகும். இத்தலத்தின் புராண பெயர் திருக்கவித்தலம் ஆகும்.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 9 வது திவ்ய தேசம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இத்தல இறைவன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கஜேந்திரன் என்ற இந்திராஜும்னன், முதலையாக இருந்த கூஹு, பராசரர், ஆஞ்சனேயர் ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.
ஆதிமூலமே என்று அழைத்த குரலுக்கு உடனே செவிசாய்த்து அபயம் அளிக்கும் இத்தல பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 108 திருப்பதிகளில் இத்தலத்தில் மட்டும் தான், பெருமாள் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்துள்ளார்.
இந்திராஜும்னன் எனும் மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தன். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். ஒரு நாள் அவன் இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்த போது கோபக்கார துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார். ஆனால் மன்னன் தன் பக்திக்குடிலை விட்டு வரவில்லை இதனால் துர்வாசர், மன்னன் இருந்த குடிலுக்குள் சென்று அவன் முன்னால் நின்றார். அப்போதும் கூட மன்னன் ஆழ்ந்த பக்தியில் மூழ்கியிருக்க முனிவர் கடும் கோபத்துடன் உரத்த குரலில்,””மன்னா! நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவனாகவும் இருப்பதாலும், நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்,”என சபித்தார்.
முனிவரின் கடும் சத்தத்தினால் கண்விழித்த மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும், பாப விமோசனமும் கேட்டான். துர்வாச முனிவரும் இரக்கம் கொண்டு, நீ யானையாக இருந்தாலும், அப்போதும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய். ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலை பிடிக்கும். அப்போது நீ ஆதிமூலமே என மகாவிஷ்ணுவை அழைக்க அவர் உன்னை காப்பாற்றி மோட்சமும், சாப விமோசனமும் அளிப்பார் என்றார். அதேபோல் கூஹு என்னும் அரக்கன் அகத்திய முனிவரின் சாபத்தால் குளத்தில் முதலையாக மாறி இருந்தான். அவனுக்கு சாப விமோசனமாக கஜேந்திரன் என்ற யானை இந்த குளத்திற்கு வரும் போது நீ அதன் காலைப்பிடிப்பாய், அப்போது அதைக்காப்பாற்ற திருமால் வருவார். அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்று இருந்தது. அதேபோல் இந்த கபிஸ்தத்தின் கோயில் முன்பு கிழக்கு திசையில் உள்ள கபில தீர்த்தத்தில் கஜேந்திரன் நீர் அருந்த இறங்கியது. இதைக்கண்ட முதலை யானையின் காலைக் கவ்வியது. ஆதிமூலமே! காப்பாற்று’ என கஜேந்திர யானை கத்தியவுடன் கருட வாகனத்தில் லட்சுமி சமேதராக விஷ்ணு வந்து, சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சமளித்ததாக வரலாறு.
அதுபோல் துன்பத்தில் உள்ள பக்தர்கள் ஆதிமூலமே என்று மனம் உருகி வேண்டிக் கொள்கின்றனர். இத்தலத்தில் ஆடி பவுர்ணமி கஜேந்திர மோட்சலீலை, வைகாசி விசாகம் தேர், பிரமோற்சவம் நடக்கிறது. மேலும் பெருமாளுக்குரிய அனைத்து திருவிழாக்களும் நடக்கிறது.