சென்னை: பறவைகளின் பசியை போக்குவது நமது ஆரோக்கியமான வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாக அமையும் என்பது ஐதீகம் என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள்.
உலகம் முழுவதிலும் வாழும் மக்களில் பலர் தினசரி பறவைகளுக்கு உணவளிப்பதை அன்றாடச் செயல்களில் வழக்கமாக வைத்திருக்கின்றனர். மனிதர்கள் தொடர்ந்து பறவைகளுக்கு உணவளிப்பது பறவைகளின் பசியைப் போக்க மட்டுமல்ல நமது ஆரோக்கியமான, வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் அமையும் என ஜோதிடநிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வாரத்தின் ஏழு நாட்களும் வெவ்வேறு கோள்களுடன் தொடர்புடையவை. ஒவ்வொரு நாளும் அதற்குரிய பறவைகளுக்கு உணவினை அளித்து வர மேலும் சிறப்பான பலன்களை பெற முடியும். பொதுவாக தினமுமே முன்னோர்களுக்கு உணவளிக்கும் விதமாக காக்கைக்கு உணவளிப்பது நல்லது. புதன் சாதகமாக இல்லாத வேளைகளில் கிளிகளுக்கு உணவளிக்கலாம்.
சந்திர திசை நடக்கும் போது பறவைகளின் தாகத்தை போக்க சிறு பாத்திரங்களில் தண்ணீர் வைத்து அவைகளின் தாகம் தீர்க்கலாம். செவ்வாய் திசை நடப்பவர்கள் பறவைகளுக்கு இனிப்புக்களை வழங்கலாம். பறவைகளுக்கு உணவளிப்பதால் அவைகளுக்கு நாம் உதவுகிறோம் என்பதை விடுத்து நமக்கு நாமே உதவிக்கொள்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சுயநலத்திற்காக என்றில்லாமல், பறவையை நேசித்து அவைகளுக்கு உணவளிக்கும் ஆர்வத்துடனும், ஆசையுடனும் செய்து வர சிறப்பான பலன்களை அடையப் பெறலாம்.