சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்துள்ளதால், நாளை வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். நாளை மறுநாள் கோவில் மூடப்படும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து வழிபாடு நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 14-ம் தேதி ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து மகரவிளக்கு பூஜை நடந்தது.
மாலையில், பொன்னம்பலமேட்டில் திரளான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மகர சங்கராந்தி பூஜைகள் நடந்தன. மகரவிளக்கு பூஜைகள் முடிவடைந்ததையடுத்து, நாளை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக பம்பையில் இருந்து மாலை 6 மணிக்குள் பக்தர்கள் நடைபயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு சத்திரம், எருமேலி உள்ளிட்ட பக்தர்கள் செல்லும் வனப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.
சபரிமலையில் இன்று காலை 10.30 மணிக்கு நெய் அபிஷேகம் நிறைவடைகிறது. இதற்கிடையே சபரிமலை கோவிலுக்கு நேற்று முன்தினம் பந்தள மன்னரின் பிரதிநிதி ராஜராஜவர்மா உள்ளிட்டோரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பந்தள மன்னனின் பிரதிநிதிகள் தற்போது சன்னதி பகுதியில் தங்கியுள்ளனர். நாளை மறுநாள் காலை 5.30 மணிக்கு பந்தள மகாராஜா பரம்பரை பிரதிநிதிகளின் தரிசனத்திற்காக கணபதி ஹோமம் நடக்கிறது.
அவர்கள் தரிசனம் முடிந்ததும் காலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு விபூதி அபிஷேகம் நடைபெறும். பின்னர் ஹரிவராசனம் பாடலுடன் ஊர்வலம் நிறைவடையும். தொடர்ந்து, கோவில் சாவி பந்தள மகாராஜா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் திருவாபரண பெட்டி பந்தள அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும். இதையடுத்து இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜைகள் நிறைவடையும். மாதாந்திர பூஜைக்காக, பிப்., 12-ம் தேதி மாலை கோவில் திறக்கப்படும் என, தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.