திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ம் தேதி மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அதையடுத்து, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சபரிமலைக்கு கடந்த 1 வாரத்தில் மட்டும் 5.35 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
சபரிமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததை தொடர்ந்து குமுளியில் இருந்து முக்குழி, சத்திரம் வனப்பாதை வழியாக சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி இதற்கான தடையை பிறப்பித்துள்ளார். இந்நிலையில், மழை குறைந்ததை தொடர்ந்து, இன்று முதல் பக்தர்கள் இவ்வழியாக செல்ல அனுமதி வழங்கி இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலையில் முதியவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் பம்பையில் இருந்து கோயிலுக்கு டோலி மூலம் பயணம் செய்கின்றனர். டோலிக்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1500-க்கும் மேற்பட்ட டோலி தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டோலியில் பயணிக்க முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டனர். பின்னர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.