சென்னை: அம்மன் வழிபாட்டுக்கு உகந்த தினம்… உத்திராயன காலத்தின் முதல் மாதம் தை. இந்த தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை மிகவும் பிரசித்தி பெற்றது. அம்மன் வழிபாட்டுக்கு சிறப்பு வாய்ந்த தினம். இந்த தினத்தில் அம்மனை வழிபடுவதால் நிறைய சிறப்பு உண்டு.
அனைத்து வெள்ளிக்கிழமையும் விரதம் இருக்கலாம். தை வெள்ளி விரதம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், மங்களகரமான காரியங்கள் நடக்கும், சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கூடும். அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு செய்வதால் மன கஷ்டங்கள் தீரும், கடன் பிரச்னைகள் தீரும். சந்தனகாப்பு அபிஷேகம் செய்வதால் உடல் நோய்கள் தீரும். மேலும் கண் திருஷ்டிகள் குறையும் என்று பெரியவர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும். காலையில் எழுந்து நீராடி விட்டு ராகு காலத்தில் துர்கைக்கு நெய் தீபம் அல்லது எலும்பிச்சை விளக்கு ஏற்றி வழிபடலாம். காலையில் செய்ய முடியாதவர்கள் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபடலாம்.
அம்பாள் விக்ரகம் இருந்தால் அபிஷேகம் செய்யலாம். படம் வைத்திருந்தால் சந்தனம், குங்குமம் வைத்து வழிபடலாம். செவ்வரளி மலர் சாற்றி வழிபாடு செய்வது நல்ல பலன் தரும். அபிராமி அந்தாதி, துக்க நிவாரண அஷ்டகம், லலிதா சகஸ்ரநாமம் படித்து வழிபாடு செய்யலாம்.
அர்ச்சனை முடித்துவிட்டு வீடு எங்கும் சாம்பிராணி காட்டிவிட்டு. சர்கரை பொங்கல், கேசரி, பாயசம் போன்றவற்றை ஒவ்வொரு வாரம் வைத்து நெய்வேத்யம் செய்யலாம். சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், பூ கொடுப்பதால் தாலி பாக்கியம் நீடிக்கும். தை மாதம் வெள்ளிகிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து சகல பலன்களையும் அடையுங்கள்.