திருமலை: திருமலை அன்னமய்யா பவனில் வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் வெங்கையா சவுத்ரி பேசியதாவது:- ஜனவரி 10 முதல் 19-ம் தேதி வரை திருமலையில் தொடர்ந்து பத்து நாட்களுக்கு சொர்க வாசலுக்கு செல்ல அனுமதிக்கப்படும். எனவே, போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வாகன போக்குவரத்தை சீராக நிர்வகிக்கவும், போதிய பார்க்கிங் வசதியை உறுதி செய்யவும், அவர் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக வைகுண்ட ஏகாதசி மற்றும் வைகுண்ட துவாதசி நாட்களில் திருமலையில் தரிசன டோக்கன் அல்லது தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விரிவான விளம்பரம் செய்ய வேண்டும். இந்த பத்து நாட்களிலும், திருமலையில் சொர்க்கவாசல் தரிசனத்துக்கான வரிசைகள் குறிப்பிட்ட தேதிகள் மற்றும் நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

எனவே, பக்தர்கள் தங்கள் டோக்கன்கள் அல்லது டிக்கெட்டுகளில் குறிப்பிட்ட தேதிகள் மற்றும் நேரங்களில் மட்டுமே வரிசையில் நுழைய வேண்டும், இதனால் நீண்ட காத்திருப்புகளைத் தவிர்த்து, இறைவனை முன்கூட்டியே தரிசனம் செய்ய வழிவகுக்கும். மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் விரிவுபடுத்தப்பட்டு, சுமார் 13,000 வாகனங்கள் நிறுத்த திட்டம் தயாரிக்கப்படும். மேலும், ரம்பகீச்சா ஓய்வு இல்லத்தில் ஏராளமான வாகனங்களை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் காவல்துறையினரை கேட்டுக் கொண்டார். உள்ளூர் காவல்துறையினருடன் ஆக்டோபஸ் குழுவின் சேவையும் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இதில் திருப்பதி எஸ்.பி.சுப்பாராயுடு, தலைமை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர், சி.இ.சத்தியநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.