திருவனந்தபுரம்: சபரிமலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1.30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு நேற்று வரை கடந்த 18 நாட்களில் 12.75 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் சபரிமலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பம்பா உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு முதல் பம்பா நதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், வெள்ளம் குறைந்ததால் இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. குமுளியில் இருந்து முக்குழி, சத்திரம் வனப்பகுதி வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர்நிலைகளில் பக்தர்கள் கவனமாக நடமாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சபரிமலையில் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், முரளிகிருஷ்ணா அடங்கிய தேவசம்போர்டு பெஞ்ச் கூறியதாவது:-
சபரிமலையில் கனமழை பெய்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பை தேவசம்போர்டு உறுதி செய்ய வேண்டும். என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பத்திரிகைகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
கனமழையையும் பொருட்படுத்தாமல் 80,000 பக்தர்கள் வருகை சபரிமலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று இரவு வரை நீடித்தது. நாள் முழுவதும் தொடர் மழை பெய்தாலும், பக்தர்கள் கவலைப்படாமல், பம்பையிலிருந்து மலை ஏறி, வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று மாலை வரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மாலை 6 மணி வரை 71,922 பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பினர். தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், நேற்று கனமழையிலும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வனப்பகுதி வழியாக செல்ல தடை சபரிமலை செல்லும் பக்தர்கள் குமுளியில் இருந்து முக்குழி, சத்திரம் வழியாக நடந்து செல்ல வேண்டும். இது வனப்பகுதி. மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் மட்டுமே பக்தர்கள் இந்த வனப்பாதை வழியாக அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் பகலில் மட்டும். இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி இந்த வனப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.