கொடுமுடி: குழந்தை வரம் வேண்டி கொங்கு நாட்டில் உள்ள கொடுமுடிக்கு வரும் பக்தர்களின் இன்னல்களை நீக்கி அருள்பாலிக்கிறார் கொடுமுடிநாதர் என்று அழைக்கப்படும மகுடேஸ்வர சுவாமி. வேண்டுவன நிறைவேறுவதால் இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையோ அதிகரிக்கிறது.
பார்ப்போமா… கொடுமுடி சிவன் கோயிலின் வரலாற்றை… கொங்கு நாட்டில் உள்ள 7 சிவதலங்களில் கொடுமுடியும் ஒன்று. கொடு என்றால் மலை. முடி என்றால் சிகரம். மலை சிகரமே மூலஸ்தானமாக உள்ளது. இதனால்தான் மூலவர் கொடுமுடிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி புன்னகைக்க வைக்கும் இறைவனுக்கு மகுடேஸ்வரர், கொளுந்தீஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் சவுந்தர நாயகி, வடிவுடைய நாயகி.
ஈரோட்டில் இருந்து திருச்சி செல்லும் பாதையில் 40 கிலோ மீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது. இந்த கோயில் காவிரி நதியின் மேல்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுவாமி, அம்மன், பெருமாள் சன்னிதிகளுக்குரிய மூன்று கோபுரங்கள் உள்ளன. கோயிலின் உட்புறம் வடக்கில் சுவாமி சன்னதிம், தெற்கில் அம்மன் சன்னதி, தென்மேற்கு மூலையில் அனுமன் சன்னதி, வன்னி மரம், பிரம்மாவின் சன்னதி அமைந்துள்ளன. மேலும் மற்ற பரிவார சன்னதிகளும் இக்கோயிலில் அமைந்துள்ளன.
பெருமாள் கோயிலின் உள்ளே இருபுறமும் பன்னிரு ஆழ்வார்கள், பரமபதநாதர் வெங்கடாஜலபதி, கருடன் அருள்பாலிக்கின்றனர். நடுவில் மூலவர் வீரநாராயணப் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். கோயிலுக்கு எதிரில் காவிரிக்கரையில் சக்தி விநாயகர் அமர்ந்துள்ளார். இவரை தரிசித்த பின்னரே கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் வலிமை மிக்கவர் என்ற போட்டி எழ… தங்களை நிரூபிக்க ஆதிசேஷன் மேரு மலையை கெட்டியாக பிடித்துக் கொள்வது. அதை வாயு பகவான் தனது வேகத்தால் பெயர்க்க வேண்டும் என்ற போட்டி உருவானது. இதில் யார் வெற்றி பெறுகிறாரோ அவரே வலிமை வாய்ந்தவர் என்று முடிவுக்கு வந்தனர். இதன்படியே இருவரும் செயல்பட இதில் மேரு மலை சிதறி ஐந்து துண்டுகளாக பூமியில் விழுந்தன. அவை ஒவ்வொன்றும் ரத்தினமாக மாறி லிங்கங்களாக ஆனது. இவற்றில் வைரக்கல் கொடுமுடியில் விழுந்தது. இதனால் வைரக்கல்லால் ஆன லிங்கமாக இறைவன் குடியிருப்பதாக ஐதீகம்.
சிவப்புக் கல் திருவண்ணாமலையிலும், மரகதக் கல் ஈங்கோய் மலையிலும், நீலக்கல் பொதிகையிலும், மாணிக்கம் வாட்போக்கி (அய்யர் மலை)யிலும் விழுந்தன என்பது புராண வரலாறு. பார்வதி, பரமேஸ்வரன் திருமணத்தின் போது ரிஷிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூட வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர உலகை சமநிலைப்படுத்த இறைவன் அகத்தியரை அழைக்க… அவரோ… நான் மட்டும் உங்கள் திருமண காட்சியை பார்க்க முடியாமல் போகுமே என்று வருத்தப்பட்டார். அப்போது இறைவன் எனது திருமணக் காட்சியை கொடுமுடியில் உனக்கு காட்டி அருள்வேன் என்று அருள்பாலிக்க… அதன்படி கொடுமுடியில் இறைவனின் திருமணக்காட்சியை அகத்தியர் கண்டுகளித்தார்.
இறைவன் மகுடேஸ்வரரின் திருமணக்காட்சியை தரிசிக்க பிரம்மா, திருமால் ஆகியோர் கொடுமுடியில் எழுந்தருளி அமர்ந்தனர். அதனாலேயே சுவாமி, திருமால், அம்மையார் ஆகிய மூவருக்கும் தனித்தனியே மூன்று கோபுரங்கள் அமைந்தது தனிச்சிறப்பு.
சைவ, வைணவ சமநோக்கு நிலையில் வழிபடும் கோயில். மூர்த்திகள் புறப்பட்டு உலா வரும் போது சிவனும், திருமாலும் சேர்ந்து காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சியாகும். பிரம்மதேவரின் அடையாளமாக வன்னி மரம் அமைந்துள்ளது. இந்த வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. பழமையான இந்த மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இருக்காது.
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் இந்த கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் ஆகும். இந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இக்கோயிலுக்கு வந்து மகுடேஸ்வரரையும், சனி பகவானையும் வணங்கி வழிபட்டு செல்கின்றனர்.
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று இந்த கோயிலுக்கு வந்து காவிரியில் நீராடி, மகுடேஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அம்பாளை வணங்கி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். கொடுமுடி கோவிலில் சனீஸ்வரர் ஒரு கையில் பாம்பும், ஒரு கையில் சூலாயுதமும் பிடித்தபடி காக வாகனத்தில் மேற்கு பார்த்த சன்னிதியில் வீற்றிருக்கிறார். இங்கு சனி தோஷம் உள்ளவர்கள் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
பிதுர் தர்ப்பணம் செய்யலாம். அறுபதாம் கல்யாணம், ஆயுள் ஹோமமும் நடத்தப்படுகிறது. ஆதிசேஷனால் உருவான தலம் என்பதால் ராகு, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்கப்பெறுகிறார்கள். குழந்தை பாக்கியம் அடைகிறார்கள். நவக்கிரக பூஜை செய்வது நல்ல பலனை தரும். வேப்பமரமும், அரச மரமும் இணைந்துள்ள மரத்தடியில் உள்ள நவநாயகருக்கு காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றினால் திருமணமாகும். குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
முன்னோர்கள் சாப விமோசனம், திருமணத்தடை நீங்க, திதிகள் கொடுத்தல், சனீஸ்வர தோஷ நிவர்த்தி பரிகாரம், கடன் தொல்லை நீங்க பரிகாரம், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது. வேண்டுவன நிறைவேறுவதால் இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்தபடியே உள்ளது