தஞ்சாவூர்: நவக்கிரகங்களும் வழிபட்ட ஸ்தலம் தஞ்சை மாவட்டம் குருங்குளம் செஞ்சுடேஸ்வரர் கோயில். இத்தலத்திற்கு மேலும் ஒரு பெருமையாக பெருமாள் , ஸ்ரிதேவி, பூதேவியுடன் கம்பீரமாக காட்சி தருகிறார். ஒரே இடத்தில் சிவனையும், பெருமாளையும் வழிபட கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று மனம் உருகி பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
சூரியன் ஒவ்வொரு நாளும் தன்னுடைய இயல்பான பணியை பகல் பொழுதில் முடித்துக் கொண்டு, தான் மறையும் நேரத்தில் சிவபெருமானிடம் ஆசியைச் பெறும் முகமாக தனது ஒளிக்கதிர்களை சிவலிங்கம் மீது படரச் செய்யும் தலமாக இயல்பாகவே அமைந்துள்ளமையால், அந்த ஸ்தலம் மிகவும் சிறப்புக்குரியத் தலமாக விளங்கும்,
அதுவும் கோயிலும், தீர்த்த குளமும் அருகருகே இருக்க வேண்டும். இப்படி கோயிலும் குளமும் அருகருகே இருக்கும் இடத்தில், பல முனிவர்களும், சித்தர்களும் வந்து தங்களுடைய சித்து விளையாட்டுகளையும், தவ வலிமைகளால் சிவபெருமானை கட்டுணர்ந்துள்ளனர். எனவே மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவலிங்கத்தை காணுவதும், அதனை தரிசனம் செய்வதும் காண கிடைக்காத ஒரு காட்சியாகும்.
அப்படிப்பட்ட ஒரு ஸ்தலம் தான் தஞ்சாவூருக்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாகுயர் நாட்டின் தலைமை கிராமமான குருங்குளமாகும். குருங்குலம் என்று பெயர் வருவதற்கான ஒரு காரணத்தையும் தெரிந்து கொள்வோம். இந்த ஊரில் கோயிலும், அதனையொட்டி உள்ள குளத்தாலும் தான் குருங்”குளம்” என பெயர் வர காணமாக இருந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.
மேற்கு நோக்கி சுயம்புவாக எழுந்தருளியுள்ள செஞ்சுடேஸ்வரரும், தெற்கு நோக்கி அருள்பாலித்து வரும் அம்பாள் அகிலாண்டேஸ்வரியும் அகிலத்தை காக்க வந்தது போல், இந்த ஊரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட சடையன் குளம் தீர்த்தம் தான் செஞ்சுடேஸ்வரருக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. . குளக்கரையில் அமைந்துள்ள இக்கோயில் செம்புராண் கற்கள் எனப்படும் ஒருவித பழமையான கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. காலப்போக்கில் கோயில் சிதைந்து போனது.
இந்த ஸ்தலத்துக்கு நவக்கிரக நாயகர்கள் ஒன்றுசேர்ந்து வந்து செஞ்சுடேஸ்வரரை தரிசித்து சென்றதால், இந்த கோயிலில் நவக்கிரக சன்னதி ஏதும் கிடையாது.
இங்குள்ள சிவபெருமானான செஞ்சுடேஸ்வரரை வழிபட்டாலே ” நவக்கிரகங்களையும் வழிபட்டு பேறு கிட்டும்”.
இந்த திருக்கோயில் முன்பாக குளக்கரையில் விநாயகரும், முருகன் வள்ளி – தெய்வாணையுடன் எழுந்தருளியுள்ளார். பைரவரும், தெட்சிணாமூர்த்தியும், சட்டீஸ்கேவரரும் தனித்தனி சன்னதிகள் அருள்பாலித்து காலப்போக்கில் சன்னதிகள் சேதமானதால் தற்போது ஒரே இடத்தில் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இத்தலத்தில் வேறு ஒரு கூடுதல் சிறப்பும் உள்ளது, பெருமாள் , ஸ்ரிதேவி, பூதேவியுடன் கம்பீரமாக காட்சி தருகிறார். ஒரே இடத்தில் சிவனையும், பெருமாளையும் வழிபட கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
இக்கோயிலில் தினமும் மாலை நேரத்தில் சூரியன் தன்னுடைய ஒளிக்கதிர்களை செஞ்சுடேஸ்வரர் மீது சிதறவிட்டு மறையும் அற்புத நிகழ்வு தொடர்ந்து இன்றளவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இங்கு பவுர்ணமி பூஜையும், பிரதோஷ வழிபாடும் ஆன்மிக பக்தர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
இக்கோயிலின் அருகே எழுந்தருளியுள்ள வேதமுத்து மாரியம்மன் தான் கிராமத்தின் காவல் தெய்வமாக காத்திருந்து எல்லோரையும் இன்புற்று வாழ வழிநடத்தி செல்கிறார். இந்த அம்மனுக்கு ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ஊரே ஒன்று கூடி விழா எடுப்பதும், ஊரில் உள்ளவர்கள் தன்னை வந்து தரிசிக்க முடியாமல் இருந்தால் அவர்களும் தரிசிக்க தானே வீதியுலாவாக அம்மன் வீடு வீடாக சென்று வருகிறார். அதே போல் பங்குனி உத்திர நாளில் ஏக தின வழிபாடு இத்தலத்தில் நடத்தப்படுகிறது.