தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ திருவிழா தொடங்கியது. இதில் வரும் எட்டாம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு கோயிலில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருள கொடியேற்று விழா நடந்தது. பின்னர் சிறப்பு வழிபாடுகள் தொடங்கியது.
விழாவில் வரும் 6 ஆம் தேதி ரிஷப வாகனத்தில் ஓலைச்சப்பரமும், 8 ஆம் தேதி திருக்கல்யாணமும், 10 ஆம் தேதி திருத்தேரோட்டம், 11 ஆம் தேதி பஞ்சமூர்த்திகளும் மகாமக குளக்கரையில் எழுந்தருள பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் கும்பகோணம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர். வரும் 11ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி பங்குனி உத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.