ஹைதராபாத்: கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுப்பிரசாதம் தயாரிக்க நெய், விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இது ஏழுமலையானை சேர்ந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, சிபிஐ இயக்குநரின் மேற்பார்வையில் 5 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தக் குழு விரைவில் விசாரணையைத் தொடங்கும். இந்நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது ஐதராபாத்தை சேர்ந்த இ.ராமராவ் என்ற வழக்கறிஞர், சிவில் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், “கலப்பட நெய் அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பப்பட்டதை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உறுதி செய்துள்ளார். இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அவரது சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்,” என்றார். இந்த மனுவை ஐதராபாத் சிவில் நீதிமன்ற தலைமை நீதிபதி ரேணுகா நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். நவம்பர் 22-ம் தேதி பவன் கல்யாண் அதே நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.