திருவனந்தபுரம்: இந்த ஆண்டு மண்டல் மற்றும் மகரவிளக்கு காலங்களில் சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் தெரிவித்தார்.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இந்தாண்டு மண்டல பூஜைகளுக்காக வரும் 15-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கோட்டயத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மண்டல மற்றும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு திட்டத்தை செயல்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
பக்தர்கள் இறந்தால் அவர்களது உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும். பொதுப்பணித்துறை சாலைகள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் நவம்பர் 10ம் தேதிக்குள் முடிக்கப்படும்.
1000 துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். 13,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்கள் இளைப்பாறுவதற்காக மரத்தோட்டம் முதல் சன்னிதானம் வரை 1000 இரும்பு நாற்காலிகள் போடப்படும். நிலக்கல் மற்றும் பம்பை சன்னிதானத்தில் இ-டாய்லெட், பயோ டாய்லெட் உள்ளிட்ட 3,080 கழிப்பறைகளும், பெண்களுக்கான 100 கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நிலக்கல்லில் கடந்த ஆண்டு 7500 வாகனங்கள் மட்டுமே நிறுத்த இடம் இருந்தது. இம்முறை 10,000 வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. Fast Talk முறையில் கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த ஆண்டு சபரிமலைக்கு வந்த 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.