ராமநாதபுரம்: தென்னகத்தின் சபரிமலை என அழைக்கப்படும் ராமநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் 26-ம் ஆண்டு மண்டல பூஜை வெகுவிமரிசையாக நடந்தது. சபரிமலையில் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியாக கருதப்படும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி, சபரிமலைக்குப் பிறகு ராமநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் மட்டுமே நடைபெறுகிறது.
ராமநாதபுரத்தை அடுத்த ரகுநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள வல்லபை அய்யப்பன் கோயிலில் கடந்த 26-ம் தேதி மண்டல பூஜையை முன்னிட்டு பேட்டை துள்ளல் ஆராட்டு விழா நடந்தது. பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முகத்திலும், உடலிலும் வண்ணப் பொடிகளை பூசிக் கொண்டனர்.
ஆடும் குதிரைகளின் ஆட்டத்துடன் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.