சென்னை: நடிகர் அருள்நிதி நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘வேட்ட சாமி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை படக்குழுவினர் அறிமுக வீடியோவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் அருள்நிதியும் ஒருவர். குறிப்பாக திரில்லர், ஆக்ஷன் உள்ளிட்ட கதைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை ‘பம்பர்’ திரைப்படத்தை இயக்கிய செல்வக்குமார் எழுதி, இயக்குகிறார். இயக்குநராக மட்டுமின்றி, கதைக்களத்தை வித்தியாசமான கோணத்தில் அணுகும் முயற்சியிலும் செல்வக்குமார் கவனம் செலுத்தி வருகிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் அமீர்
‘வேட்ட சாமி’ திரைப்படத்தில் இயக்குநரும் நடிகருமான அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் தலைப்பு மற்றும் அறிமுக வீடியோ வெளியாகியுள்ள நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
