சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவா செல்லவிருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவாவுக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த இண்டிகோ விமானம் 6E588, திங்கள்கிழமை மாலை 5.40 மணிக்குப் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் கிடைத்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டுக் குழு ஆய்வு மேற்கொண்டு, மாலை 6.05 மணியளவில் மிரட்டலைக் குறிப்பிட்ட இலக்கைக் கொண்டதாக வகைப்படுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டது. மாலை 6.55 மணிக்குள் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர்.
தொடர்ந்து விமானத்தின் உட்பகுதி, பயணிகளின் உடைமைகள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இரவு 9.20 மணியளவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தால் விமானம் புறப்படுவதில் சுமார் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. மிரட்டல் விடுத்தது யார், அதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமான நிலையங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
