சென்னை: ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே எழுதி இயக்கும் இப்படம் ஆக்ஷன் திரில்லர் வகையில் உருவாகியுள்ளது. ராஷ்மிகா இதில் பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
முற்றிலும் மாறுபட்ட தோற்றம்
படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் உடல் ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் பல சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான காதல் மற்றும் குடும்ப கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, தீவிரமான ஆக்ஷன் காட்சிகளில் அவர் தோன்றுகிறார்.
டீசரில் ராஷ்மிகாவின் ஆக்ரோஷமான தோற்றம் முக்கியமாக இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கையில் ரத்தக்கறை படிந்த ஈட்டியுடன் அவர் தோன்றும் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன.
நீருக்கடியில் சண்டைக்காட்சி
படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ராஷ்மிகா இடம்பெறும் நீருக்கடியில் நடைபெறும் சண்டைக்காட்சி குறிப்பிடப்படுகிறது. பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முக்கியமான நீருக்கடிக் காட்சிகளில் ஒன்றாக இதனை படக்குழு முன்னிறுத்தியுள்ளது.
ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான்-இந்தியா படமாக உருவாகியுள்ள ‘மைசா’, நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
