சென்னை: புதிய திரைப்படத்தின் சண்டைக்காட்சியில் நடித்தபோது முதுகில் காயமடைந்த நடிகர் விஷாலுக்கு மருத்துவர்கள் 3 வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்திலும் அவரால் நேரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுந்தர் சி. இயக்கத்தில் உருவாகி வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது விஷால் எதிர்பாராத விதமாக காயமடைந்தார்.
டூப் இல்லாமல் அவரே சண்டைக்காட்சியில் நடித்தபோது விபத்து ஏற்பட்டதாக விஷால் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனைக்கு பின்னர் மருத்துவர்கள் அவருக்கு 3 வாரங்கள் முழுமையான ஓய்வு தேவை என்று அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அவர் வழக்கமான பணிகளில் இருந்து சில காலம் விலகியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கும் விஷால், முக்கியமான பொதுக்குழு கூட்டத்தில் நேரில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
“பல ஆபத்தான சண்டைக்காட்சிகளில் நடித்திருந்தாலும், இந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்த விபத்து” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஷால் விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
