நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காதல், நட்பு மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதால் இரு மாநில ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அஹ்மது கபீர் இப்படத்தை இயக்கியுள்ளார். காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும், லட்சுமி ஜோதிஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் லால், பொப்பன் அலுமூடன், சஞ்சு சானிச்சென், சோசம்மா, ரெஞ்சித் சேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதலும் நகைச்சுவையும் கலந்த குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. கடந்து சென்ற உறவுகள், மறக்க முடியாத நினைவுகள், நட்பின் முக்கியத்துவம் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான உணர்வுப்பூர்வமான பிணைப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் உறவுகளின் அழகையும், சில மனிதர்கள் நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் படத்தின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாபின் ஜான் மற்றும் அஹ்மது கபீர் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். தமிழகத்தில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. ஏற்கனவே ‘ஜூன்’, ‘மதுரம்’ போன்ற படங்களை இயக்கிய அஹ்மது கபீர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் மாதத்தின் எதிர்பார்க்கப்படும் காதல் நகைச்சுவை திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
