சென்னை: ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தை பார்த்த இசையமைப்பாளர் தேவா, நடிகரும் இயக்குநருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியை நேரில் சந்தித்து அன்புடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் சுயாதீன இசைக் கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கிய ஹிப்ஹாப் தமிழா ஆதி, ‘ஆம்பள’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும், ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் நடிகராகவும் அறிமுகமானார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் கானா இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கானா பாடல்களுக்கு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்திய இசையமைப்பாளர் தேவாவை கவுரவிக்கும் வகையிலும் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
படத்தை பார்த்த தேவா, அதன் திரைக்கதை மற்றும் கானா இசைக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை பாராட்டியுள்ளார்.
இதையடுத்து ஹிப்ஹாப் தமிழா ஆதியை நேரில் சந்தித்த தேவா, அவரை அன்புடன் முத்தமிட்டு வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஆதி, “இது போதும் எனக்கு இது போதுமே” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
