சென்னை:2024-ம் ஆண்டு வெளியாகி கவனம் பெற்ற ‘நந்தன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவான ‘நந்தன்’ திரைப்படம் கிராமப்புற அரசியல், ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரப் பகிர்வு தொடர்பான பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருந்தது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
இரண்டாம் பாகம் அறிவிப்பு
முதல் பாகம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ‘நந்தன் 2’ குறித்த அறிவிப்பை இயக்குநர் இரா.சரவணன் வெளியிட்டுள்ளார்.
இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் யார் யார் நடிக்க உள்ளனர் என்பது தொடர்பான முழுமையான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
தொடரும் கதை?
‘நந்தன்’ திரைப்படம் சமூக மற்றும் அரசியல் பின்னணியில் உருவான கதையை மையமாகக் கொண்டிருந்ததால், அதன் தொடர்ச்சியில் என்ன கதை பேசப்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
இதற்கு முன்பும் ‘நந்தன் 2’ உருவாக்கத் தயாராக இருப்பதாக இயக்குநர் இரா.சரவணன் தெரிவித்திருந்தார். தற்போது இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
