சென்னை: நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மக்கள் காவலன்’ திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
‘பைசன் காளமாடன்’ படத்துக்குப் பிறகு பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் அடுத்த படமாக ‘மக்கள் காவலன்’ உருவாகிறது.
இப்படத்தை சந்தோஷ் குமார் எழுதி இயக்குகிறார். கண்ணியமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதன், ஊழல் நிறைந்த அமைப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குள் சிக்குவது படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மணிகண்டன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்ய, அருள் மோசஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.
மணிகண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு, திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால் படத்தின் வெளியீட்டுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
