சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.160 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி வரும் இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ரூ.350 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாக உள்ளது. விஜய்யின் ‘லியோ’ படத்தின் ஓடிடி உரிமை ரூ.120 கோடி வரை விற்கப்பட்டதே தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக இருந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ ரூ.160 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
