சென்னை: நடிகர் அஜித்குமாரின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தையும், ரேசிங் களத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் பதிவு செய்துள்ள ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்’ ஆவணப்படத்தின் டிரெய்லர் சென்சார் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
சினிமாவுடன் கார் பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்டுள்ள அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு மீண்டும் சர்வதேச ரேசிங் போட்டிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
ரேசிங் உலகின் உண்மை தருணங்கள்
தனது சொந்த அணியான ‘அஜித்குமார் ரேசிங்’ மூலம் பல்வேறு சர்வதேச தொடர்களில் பங்கேற்று வரும் அஜித்தின் ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்டு ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்’ என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற Asian Le Mans, 24H Series உள்ளிட்ட மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்களில் அஜித் பங்கேற்ற உண்மை தருணங்கள் ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சவால்கள் முதல் சாதனை வரை
ரேசிங் களத்தில் அஜித் எதிர்கொண்ட சவால்கள், பின்னடைவுகள், கடினமான தருணங்கள் மட்டுமின்றி, 2025 துபாய் 24H போட்டியில் அவர் போடியம் வென்ற வரலாற்றுச் சாதனையும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் முன்னணி பார்முலா-1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், ஆதித்யா படேல், ஜூலியன் கெர்பி உள்ளிட்ட சர்வதேச ரேசிங் பிரபலங்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஆவணப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் ரேசிங் களத்தில் சந்தித்த போராட்டங்களையும் சாதனைகளையும் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் டிரெய்லர் சென்சார் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரெய்லரின் ரன்னிங் டைம் 3 நிமிடங்கள் 49 விநாடிகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
