சென்னை: கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது நடிகர் நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் சிறப்புப் பாடல் ஒன்றுக்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
இந்நிலையில், தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகி வரும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சிறப்புப் பாடல் ஒன்றில் நடனமாட ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கும் இப்படம் மாஃபியா பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் இந்தப் பாடலுக்காக இரண்டு நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும், சுமார் 4 நிமிடங்கள் இடம்பெறும் பாடலுக்கு அவருக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பப் பாங்கான மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீரென குத்துப்பாடலுக்கு நடனமாடுவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது, கீர்த்தி சுரேஷ் படத்தில் ஒரு சிறப்புப் பாடலில் நடனமாடுவது உண்மைதான் என்றும், படத்தின் முக்கியமான சூழலில் அந்தப் பாடல் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் அவரது சம்பளம் குறித்த தகவலை உறுதிப்படுத்தவில்லை.
