ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜூனை நடிகர்கள் ராணா டகுபதி, நாக சைதன்யா, உபேந்திர ராவ், விஜய் தேவரகொண்டா மற்றும் புஷ்பா இயக்குநர் சுகுமார் ஆகியோர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து பேசி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம் பார்க்க சென்றபோது, தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் உடனடியான ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 50 ஆயிரம் பிணையுடன் அல்லு அர்ஜுனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து சிறையில் இருந்து ரிலீஸ் ஆன அல்லு அர்ஜுன் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். இதனையடுத்து நடிகர்கள் ராணா டகுபதி, நாக சைதன்யா, உபேந்திர ராவ், விஜய் தேவரகொண்டா மற்றும் புஷ்பா இயக்குநர் சுகுமார் ஆகியோர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து பேசி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.