சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘வாழை’ திரைப்படத்தில் உள்ள அனைத்து விஷயங்களும் 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது சிறுகதையில் பதிவு செய்யப்பட்டவை என்று தர்மன் கூறியுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“வாழை’ படம் பார்த்தேன். நான் எழுதிய சிறுகதைதான் படத்திலும் இருக்கிறது என்று நிறைய நண்பர்கள் சொன்னார்கள். 10 வருடங்களுக்கு முன்பே படத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் ‘வாழையடி’ என்ற சிறுகதையில் எழுதியிருந்தேன்.
அதில் காட்டப்படுவது எல்லாம் ‘வாழை’ படத்திலும் அப்படியே இருக்கிறது. சினிமாவுக்காக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் பையனின் வேலை, தரகர், கூலி உயர்வு, ரஜினி-கமல் எல்லாமே கிட்டத்தட்ட என் சிறுகதையில் இருப்பது தான்.
வாழைத்தார் சுமந்து இரண்டு சிறுவர்களின் உழைப்பு எவ்வாறு சுரண்டப்படுகிறது? இதைத்தான் என் கதையிலும் பதிவு செய்திருக்கிறேன். மாரி செல்வராஜ் அதையே செய்துள்ளார்.
ஒருவேளை அவர் என் கதையைப் படிக்காமல் இருக்கலாம். அவரே வாழையையும் சுமந்திருக்கலாம். ஆனால், அந்தக் குழந்தைகள் படும் இன்னல்களுக்கு வடிவம் கொடுத்தவன் என்ற முறையில், அதற்கு முழு உரிமையுடையவன் நான்” என்றார் சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.
சோ.தர்மனின் இந்த நேர்காணல் வெளியான சில மணி நேரங்களில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது முகநூல் பக்கத்தில், “எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய வாழையடி என்ற சிறுகதையை இப்போதுதான் படித்தேன். இந்தக் கதையை அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாஸ்டர் பொன்வேல், மாஸ்டர் சேகர், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.