மும்பை: எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று நடிகர் சல்மான் கான் புகார் அளித்துள்ளார். இதனால் மும்பை சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே 2 இளைஞர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர், இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக விக்கி குப்தா (24), சாகர் பால் (21) ஆகியோர் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக சல்மான் கானிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அதில், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிரபல கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அன்மோல் இருவரும் பொறுப்பேற்றுள்ளனர் என்பதை முகநூல் பதிவின் மூலம் தெரிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தன்னையும் தனது குடும்பத்தினரையும் தூங்கிக் கொண்டிருந்த போது கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.