புதுச்சேரி : புதுச்சேரியில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை கடற்கரையில் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்துள்ளனர்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. பின்னணியில் ஏ.ஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் – ஜெஸியின் காதல் ரசிகர்களைப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்தும் கட்டிப் போட்டுள்ளது.
2010ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றும் காதலர்களின் விருப்பப் படமாகவே நீடிக்கிறது. காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் பட்டியலில் விண்ணைத் தாண்டி வருவாயா நிச்சயம் இருக்கும்.
திரைக்கு வந்த 14 ஆண்டுகளில் ஒவ்வொரு காதலர் நாளன்றும் சிறப்பு திரையிடலைக் கண்டு வருகிறது. முக்கியமாக, சென்னை பி.வி.ஆர் திரையரங்கில் ரீ-ரிலீஸில் இப்படம் 1000 நாள்களைக் கடந்து சாதனையைப் படைத்தது.
இந்த பி.வி.ஆர் திரையில் மட்டும் கடந்த 142 வாரங்களாக இப்படம் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வருகிறது. இந்தியளவில் ரீ-ரிலீஸில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் என்கிற சாதனையை பெற்றுள்ளது விண்ணைத்தாண்டி வருவாயா.
இந்த நிலையில், நேற்று ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தை பெரிய எல்ஈடி திரை மூலம் புதுச்சேரி ராக் கடற்கரை பகுதியில் திரையிட்டுள்ளனர். இதனை, நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடி அமர்ந்து கண்டுகளித்தனர். இதற்கு, பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் தொடர்ந்து இதுபோல் கடற்கரை பகுதிகளில் காட்சிப்படுத்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.