சென்னை: ‘படையப்பா’ ரீரிலீஸ் செய்யும் பணிகள் விரைவில் தொடக்க உள்ளது என்ற தகவல்கள் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
ரஜினி நடித்த ‘படையப்பா’ படத்தினை ரீ-ரிலீஸ் செய்வதற்கான பணிகளை விரைவில் தொடங்கவுள்ளார்கள். 1999-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘படையப்பா’. இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்து விட்டது. மேலும், பல்வேறு படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வந்தாலும் ‘படையப்பா’ மட்டும் ரீ-ரிலீஸுக்கான பணிகள் எதுவுமே நடைபெறவே இல்லை.
ஏனென்றால், இப்படத்தின் தயாரிப்பாளர் ரஜினிகாந்த். அவரிடம் பலமுறை கேட்டும், அவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். தற்போது ரஜினி – கே.எஸ்.ரவிகுமார் பேசி இப்படத்தினை ரஜினி திரையுலகிற்கு அறிமுகமான 50-ம் ஆண்டு கொண்டாட்டத்துக்கு வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
ரஜினியின் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ரஜினி திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகளாகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.
இதில் ‘படையப்பா’ ரீ-ரிலீஸும் ஒன்று. இதற்கான பணிகள் விரைவில் துவங்கவுள்ளார்கள். ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடவுள்ளார்களா அல்லது ரஜினி பிறந்த நாளுக்கு வெளியிடவுள்ளார்களா என்பது விரைவில் தெரியவரும். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், ரஜினி, லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், மறைந்த நடிகை சவுந்தர்யா, நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தனது அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் ரஜினியே தயாரித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார்.