சென்னை: மீன் ஊறுகாய் மற்ற ஊறுகாய் வகைகளில் இருந்து சற்று மாறுபாடான சுவையுடையது. மீன் மலிவாக கிடைக்கும் சமயங்களில் தயாரித்து வைத்துகொள்ளலாம். நேரம் கிடைக்கும்போது செய்து வைத்து கொண்டால் தேவைப்படும்போது உபயோகித்துகொள்ளலாம். மீன் ஊறுகாய் மாறுபட்ட சுவையுடன் இருப்பதால் அனைவரும் விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள்:
மீன் – 1/2 கிலோ (முள் இல்லாத மீன்)
மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 4ஸ்பூன்
வெந்தயப்பொடி – 1ஸ்பூன்
பூண்டு – ௧ (நறுக்கியது)
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
வினிகர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
கடுகு – ஒரு ஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிது
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: முதலில் ஊறுகாய் செய்வதற்கு தேவையான மீன்களை எடுத்து சுத்தம் செய்து சதுர வடிவில் வெட்டி வைக்க வேண்டு. பின்னர் இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சுத்தம் செய்து வைத்துள்ள மீன்களுக்கு மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக மீன்களுக்கு மேல் படும்படி கலந்து விட வேண்டும்.
இதனைத் தொடர்ந்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உப்பு கலந்து வைத்திருக்கும் மீன்களை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகிய பொருட்களை போட்டு நன்றாக கிளற வேண்டும். பின்னர் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் நாம் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள மீன்களையும் சேர்க்க வேண்டும்.
சரியாக 5 நிமிடங்கள் மீனை வேக விட்டு அரை கப் வினிகர் சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கொதிக்க வைத்து விட்டு இறக்கினால் சுவையான மீன் ஊறுகாய் தயார். பின்னர் ஆறியதும் ஊறுகாயை காற்று போகாத பாட்டிலில் போட்டு அடைத்து வைத்து தேவையான போது எடுத்து பரிமாறலாம்.