தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 1 கைப்பிடி
மிளகாய் – 4
வாழைப்பூ – 1 சிறியது (நறுக்கியது)
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு – 4 பல்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
குழம்புக்காக…
தக்காளி – 2
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
வெங்காயம் – 2
தனியா தூள் – 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – ¼ கப்
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – சுவைக்க
முந்திரி பருப்பு – 10
தாளிக்க..
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை: கடலைப்பருப்பை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அவற்றை மிக்ஸியில் போட்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். நன்றாக அரைத்தவுடன், இறுதியாக வாழைப்பூவை சேர்த்து கரடுமுரடான விழுதாக அரைக்கவும். நிறைய தண்ணீர் சேர்க்க வேண்டாம். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். நன்றாக கலந்து சிறிய உருண்டைகளாக செய்யவும். உருட்டிய உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து 8 நிமிடம் வேக வைக்கவும்.
குழம்பு செய்ய… வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். புளி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கரைக்கவும். முந்திரி, தேங்காயை நைசாக அரைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கும் போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து தக்காளி வதங்கும் வரை கிளறவும். தக்காளி நன்கு வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் துருவிய தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு வேகவைத்த வாழைப்பூ உருண்டைகளைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு (வாழைப்பூ உருண்டையில் உப்பு உள்ளது) சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும். தேங்காயின் பச்சை வாசனை போனதும் அதை நீக்கி சூடான சாதத்துடன் சாப்பிடலாம். சுவையான வாழைப்பூ உருண்டை குழம்பு தயார்!