தேவையான பொருட்கள்:
கோவைக்காய் – 1/4 கிலோ
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு.
எண்ணெய் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – சிறிது
வரமிளகாய் – 4
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – சிறிது
பொட்டுக்கடலை – 1/4 டீஸ்பூன்
மல்லி – 1 1/2 டீஸ்பூன்
தேங்காய் – 2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் கோவைக்காயை நீரில் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, வெந்தயம், வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், பொட்டுக்கடலை, மல்லி ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும். பின் அதில் தேங்காயை சேர்த்து ஈரப்பதம் போக நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து அதில் கோவைக்காயை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் மூடியைத் திறந்து கோவைக்காயை கிளறி, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். கோவைக்காய் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான கோவைக்காய் தேங்காய் வறுவல் தயார்.