உணவுப்பட்டியலில் சுவையை மட்டும் இல்லாமல் ஆரோக்கியத்தை விரும்புபவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சத்தான மற்றும் சுவையான தேர்வாக இருப்பது எம்பரர் மீன். இது பொதுவாக “விலை மீன்” என்று மீனவர்களால் அழைக்கப்படுகிறது. இதற்கு “ஆரிய மீன்” என்ற பெயரும் உண்டு. வெள்ளை நிறத்தில் பருமனான தோற்றத்துடன் உடலில் வரி கோடுகளுடன் காணப்படும் இந்த மீன், இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடல் பகுதியில் வாழ்கின்றது.

இது பெரும்பாலும் பவளப்பாறைகள், பாறைகள் மற்றும் கடலடி மண்ணில் வாழும் தன்மை கொண்டது. பாசிகள் மற்றும் சிறு உயிரிகளைக் கடலில் உணவாகக் கொண்டு வளர்வதால், எம்பரர் மீனின் சுவை மிக அதிகமாக இருக்கிறது. மீனின் உடல் முழுவதும் சதை அதிகம் காணப்படும் வகையில் அமைந்திருப்பதால், இது சாப்பிடுவதற்கு எளிதாகவும், சுவையாகவும் உள்ளது. இதில் முள் இல்லாததால், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சுவையுடன் சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு இந்த மீன் மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் மற்றும் மீனவர்கள் கூறுகின்றனர். ஒரு கிலோ எம்பரர் மீன் ரூ.300 முதல் ரூ.400 வரை விலை கொண்டுள்ளது. மவுசு அதிகம் என்பதால் சந்தையில் விரைவில் விற்றுவிடும்.
எம்பரர் மீனில் நிறைந்துள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஐகோசாபென்டெனோயிக் மற்றும் டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கும், மூளையின் நன்கு செயல்படுவதற்கும் உதவுகின்றன. இதய வீக்கம், இரத்தக் குழாய்களின் அடைப்பு போன்ற பிரச்சனைகளை குறைக்கும் திறன் இதற்கு உண்டு. இதில் காணப்படும் வைட்டமின் டி, கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்துவதற்கும், உடல்நலம் மேம்படவும் பெரிதும் உதவுகின்றன.
மேலும், செனிலியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் கொண்ட இந்த மீன், கெட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளின் அளவை உயர்த்தி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சமைக்க எளிதான இந்த மீனை குழம்பு, வறுவல், புட்டு போன்ற பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம்.
சுவையும், மருத்துவ குணங்களும் ஒன்று சேர்ந்த இந்த எம்பரர் மீன், உணவுப் பட்டியலில் அடிக்கடி சேர்க்கப்பட வேண்டிய முக்கியமான ஆடம்பரமான உணவாக பார்க்கப்படுகிறது. ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் இந்த மீனை சாப்பிட பழகுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.