நம் நாட்டில் பெருஞ்சீரகம் சமையலில் நறுமணத்திற்கும் சுவைக்கும் சேர்க்கப்படும் முக்கியமான ஒரு மசாலா பொருள். சிறிய அளவில் இருக்கும் இந்தச் செடிகள் மஞ்சள் நிறத்தில் பூக்கும். இதன் இலைகள் இறகுகளைப் போல் இருக்கும். பெருஞ்சீரக விதைகள் நல்ல மொறுமொறுப்பாகவும், லேசான இனிப்புச் சுவையோடும் இருக்கும். சுவையோடு மட்டுமல்லாமல் மருத்துவ குணங்களும் இருப்பதால் இதன் பயன்பாடு மிகவும் பரவலாக உள்ளது.

ஐரோப்பிய சமையலில் பெருஞ்சீரக இலைகளும், குமிழ்களும் சாலட், பாஸ்தா, காய்கறி வகைகளில் அதிகமாக சேர்க்கப்படுகின்றன. இத்தாலிய உணவுகளில் இது மிகப் பிரபலமானதாகும். நம்நாட்டில் பெருஞ்சீரகம் சமையலின் போது மணத்தை அதிகரிக்கவும், சுவையை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. அதோடு, உணவுக்குப் பிறகு செரிமானத்திற்காக வெறும் விதைகளாகவும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
பெருஞ்சீரகத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட், வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண் பார்வைக்கு நல்லது. பண்டைய ரோமானிய மக்கள் கண் பார்வையை கூர்மையாக்க பெருஞ்சீரகத்தைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. கண்களில் ஏற்படும் குளுக்கோமா பிரச்சினையை குறைக்கவும் பெருஞ்சீரக சாறு பயன்பட்டது.
இந்தியாவில் செரிமான பிரச்சினை, இருமல், சைனஸ் பிரச்சினைகளுக்கு பெருஞ்சீரகம் பயன்படுகிறது. இதயத்தை வலுப்படுத்துதல், மலச்சிக்கலை குறைத்தல், புற்றுநோய் தடுப்பு போன்ற பல நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சமையலின் மணத்தை அதிகரிக்கும் சோம்பு, ஆரோக்கியத்திற்கும் பெரும் பலன்களை வழங்குவதால், அது உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாக கருதப்படுகிறது.