சென்னை : வாரத்தின் ஆறு நாட்களில் நாம் பெரும்பாலும் சுழற்சி முறையிலோ அல்லது தினசரி வடிக்கையாகவோ ஒரே மாதிரியான அல்லது விதவிதமான உணவுகளை செய்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால், காய்கறிகள் சார்ந்த உணவுகளுக்கென ஒருநாளை ஒதுக்கி சாப்பிட வேண்டும்.
அனைத்து விதமான காய்கறிகளையும் சேர்த்து பொரியல் போல சாப்பிட்டு வந்தால், உடல்நலம் மேம்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும். இன்று கதம்ப காய்கறி பொரியல் செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருள்கள்:
காலி பிளவர் – 100 கிராம்,
கேரட் – 1,
பீட்ரூட் – 1,
முள்ளங்கி – 1,
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி,
மிளகுத்தூள் – 1 தே.கரண்டி,
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி,
தேங்காய் துருவல் – 2 மேஜை கரண்டி,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
எண்ணெய் – 4 மேஜை கரண்டி,
கடுகு – 1/2 தே.கரண்டி,
உளுந்தம்பருப்பு – 1/2 தே.கரண்டி,
பெரிய வெங்காயம் – 1,
கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை: முதலில் எடுத்துக்கொண்ட காலிபிளவரை சூடான நீரில் 5 நிமிடம் வேகவைத்து எடுக்க வேண்டும். பின்னர் வெங்கியம் மற்றும் காலிபிளவரை பொடிப்பொடியாக நறுக்க வேண்டும்.
எடுத்துக்கொண்ட கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்றவற்றை தோல் சீவி நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
வானலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் உளுந்து சேர்த்து, பின்னர் கறிவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் காலிப்ளவர், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வேகவைத்து, பின்னர் மிளகாய் தூள் மற்றும் மிளகுத்தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கிளறினால் கதம்ப பொரியல் தயார்.