சென்னை: சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள அருமையான உருளைக்கிழங்கு பட்டாணி மசால் செய்வது எப்படி என்று தெரியுங்களா? தெரிந்து கொள்வோம் வாங்க.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 200 கிராம்
பச்சைப் பட்டாணி – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
பிரியாணி இலை – 1
பட்டை – 2
லவங்கம் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
மல்லித் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை: உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பட்டாணியை நான்கு மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்தால் பட்டாணி உடையாமல் முழுதாக வெந்து இருக்கும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம், பிரியாணி இலை போடவும். லவங்கம் வெடித்ததும், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதங்கியதும், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து லேசாக வேக விடவும். உடனே உப்பு சேர்த்து லேசாக கிளறி, அடுத்து உருளைக்கிழங்கு, பட்டாணியையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை லேசாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.