சென்னை: இட்லி மாவு நீர்த்துப் போய்விட்டால் அதில் எண்ணெய் இல்லாமல் வறுத்த ரவையை சிறிது கலந்து அரை மணி நேரம் ஊறிய பிறகு இட்லி வார்த்தால் சுவையாக இருக்கும்.
ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து மோரில் கலக்கி பச்சை மிளகாய்களை ஊற வைத்து பின்னர் காயப்போட்டால் மிளகாய் வற்றல் பார்க்க வெண்மையாகவும், அதிக ருசியாகவும் இருக்கும்.
இடியாப்பத்திற்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்துக்கொண்டால் இடியாப்பம் பிழிவது சுலபமாக இருக்கும். வத்தக்குழம்பு தாளிக்கும்போது ஆரஞ்சு பழத்தோலையும் சேர்த்துக் கொண்டால் நல்ல சுவையுடன் இருக்கும்.
கொள்ளு பயிறை காலையில் ஊற வைத்து மாலையில் தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள் உலர்த்த வேண்டும். உலர்ந்த பின் தேய்த்தால் பருப்பு கிடைக்கும். இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில் கொள்ளு பருப்பை சேர்த்து அரைத்து செய்தால் தோசை பூப்போல மிருதுவாக இருக்கும். ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேக வைத்து, ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.
பஜ்ஜி செய்யும் போது கடலை மாவு, அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதா மாவு சேர்த்தால் பஜ்ஜியின் சுவையே அலாதி. அடை மாவுடன் கார்ன் பிளேக்சை பொடித்து சேர்த்து அடை சுட்டால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் தயார் செய்யும்போது கொஞ்சம் பொட்டுக்கடலையை வறுத்துக்கொட்டினால் சுவையாக இருக்கும். பால் உறைக்கு ஊற்றும்போது வெதுவெதுப்பாக இருந்தால் தான் தயிர் நன்கு உறையும். சூடாகவோ அல்லது ஆறியதாகவோ இருந்தால் தயிர் சரியாக உறையாது.
டால்டா, நெய் போன்றவை கெட்டியாக இருக்கும்போது பாத்திரத்தில் இருந்து எடுப்பது சிரமமாக இருக்கும். ஸ்பூனை சூடாக்கிக் கொண்டு எடுத்தால் சுலபமாக வரும்.