முருங்கைக் கீரையில் நிறைந்துள்ள இரும்புச்சத்து உடலுக்கு பல நன்மைகள் தருகிறது. பொதுவாக, முருங்கை மரத்தின் அனைத்து பகுதிகளும் உடல் வலிமையை வழங்கும். முருங்கைக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. முருங்கைக் கீரையை வதக்கி அல்லது பொடி செய்து தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கட்டுரையில், செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில், இரும்புச்சத்து நிறைந்த முருங்கை பொடியை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: முருங்கை கீரை, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, துவரம் பருப்பு, கொத்தமல்லி, எண்ணெய், உளுந்து, சாதம், பூண்டு, சீரகம், வெள்ளை எள், கருவேப்பிலை, உப்பு மற்றும் புளி.
செய்முறை:
முதலில், ஒரு கடாயில் உளுந்து, கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். இது சிவந்து வரும் வரை வறுத்து எடுத்து வைக்கவும். பின்னர், வெயிலில் காய வைத்த முருங்கைக் கீரையை கடாயில் போட்டு சிறிது நேரம் வறுக்கவும். இவற்றையும் எடுத்து ஆற வைக்கவும்.
அடுத்தது, ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, வெள்ளை எள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து வறுக்கவும். கருவேப்பிலை சேர்க்கவும். மிதமான சூட்டில் வறுக்கும் போது, சிறிது புளி சேர்க்கவும். இதனை வறுத்து ஆற வைக்கவும்.
பின், இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் கன்சிஸ்டென்சிக்கு வருமாறு அரைக்கவும். அரைத்த பவுடரை தனியாக வைக்கவும். பிறகு, தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூளுடன் கலந்து விடவும். இந்த முருங்கை பொடியை 3 வாரங்கள் வரை நன்றாக வைத்துக் கொண்டு, நாள்தோறும் உணவில் சேர்க்கலாம்.
இந்த முறையில் தயார் செய்த முருங்கை பொடி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.