சென்னை: சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு பிடி கருணை குழம்பை ஊற்றிச் சாப்பிட… சுவை அள்ளும். இதை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை: பிடிகருணை – 200 கிராம், சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 10 பல், தக்காளி – 2, புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், வடகம், வெல்லம் – சிறி தளவு, கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பிடிகருணையை மண் போக கழுவி, வேக வைத்து, தோலுரித்து, வட்டம் வட்டமாக நறுக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடகம் தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி… துண்டுகளாக்கிய பிடிகருணையை சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, புளிக்கரைசலை விட்டு நன்கு கொதிக்க விடவும். குழம்பு சற்று கெட்டியானதும் வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும்.
சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இந்த குழம்பை ஊற்றிச் சாப்பிட… சுவை அள்ளும்!