சென்னை: குழந்தைகளுக்கு தினமும் சாம்பார், பருப்பு, தயிர்சாதம் செய்து தருகிறீர்களா? அப்போ மாங்காய் சாதம் செய்து தாருங்கள்.
தேவையான பொருட்கள்
அரிசி – 1 கோப்பை (200 கிராம்)
மாங்காய் – 1 சிறியது (சுமாரான புளிப்பு)
காய்ந்த மிளகாய் – 4
வெந்தயத் தூள் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 2 சிட்டிகை
கறிவேப்பிலை – 3 கொத்து
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – 3 சிட்டிகை
நிலக்கடலை – 25 கிராம்
நல்ல எண்ணெய் -25 கிராம்
உப்பு – 1 தேக்கரண்டி
செய்முறை: அரிசியை கழுவி 2 1/2 கோப்பை தண்ணீர் விட்டு குலையாமல் வேக வைத்து ஒரு தட்டில் ஆற வைத்துக் கொள்ளவும். மாங்காயை துருவிக் கொள்ளவும்.
நிலக்கடலையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, ஊளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து பின் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயத் தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.
அடுத்து துருவிய மாங்காயைப் போட்டு நன்றாக வதக்கவும். பின்பு உப்பு சேர்த்து நன்றாக கலந்து உடனே அடுப்பிலிருந்து இறக்கவும். இதில் ஆறிய சாதம், வறுத்த நிலக்கடலை போட்டு, சாதம் குலையாமல் கிளறி வைக்கவும். நிலக்கடலைக்குப் பதிலாக பொட்டுக்கடலை அல்லது முந்திரியும் வறுத்துப் போடலாம். கறிவேப்பிலை சட்னி அல்லது புதினா சட்னி, மாங்காய் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.