சென்னை: உலர் அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் இந்த அத்திப் பழத்தோடு அந்த நீரையும் சாப்பிட, ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடியது அத்திப் பழம். அளவில் சிறியவையாக இருந்தாலும், உடலுக்கு ஆரோக்கியம் தரும் நன்மைகள் இதில் ஏராளமாக உள்ளன. பொதுவாகவே, அத்திப் பழங்கள் உடலுக்கு நன்மை பயப்பவை என்றாலும், பதப்படுத்தப்பட்ட உலர் அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் இந்த அத்திப் பழத்தோடு அந்த நீரையும் சாப்பிட, ஏராளமான நன்மைகளைப் பெறலாம். இனி, இதில் உள்ள சில நன்மைகள் குறித்துக் காண்போம்.
இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. அத்திப் பழத்தில் க்ளோரோஜெனிக் அமிலம் உள்ளதால் ரத்தச் சர்க்கரை சீராகும். நீரிழிவு நோயாளிகள் இதை அருந்துவது நல்லது. அத்திப் பழத்தில் நார்ச் சத்து நிறைந்துள்ளதால் இது மலச்சிக்கலைத் தீர்க்கும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் நார்ச் சத்து மிகுந்த இந்தப் பழத்தை எடுத்துக் கொள்வது நல்லது. இந்தப் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் ஃப்ரீ ராடிகல்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும்.
இதய ஆரோக்கியத்துக்கு அத்திப் பழம் மிகச் சிறந்தது. அத்திப் பழத்தில் உடல் உறுப்புகளை நன்றாகச் செயல்படுத்தத் தேவையான புரதம், தாமிரம், மக்னீசியம், இரும்பு போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன.