கொழும்பு: முன்னேறும் சஜித் பிரேமதாசா… இலங்கை அதிபர் தேர்தலில் அதிகாலை முதல் முன்னணியில் இருந்த அனுரா திசநாயகே, ஓட்டு சதவீதம் சரியத் தொடங்கியுள்ளது. இரண்டாம் இடத்தில் இருந்த சஜித் பிரேமதாசா ஓட்டு சதவீதம் அதிகரித்து வருகிறது.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியான ஜே.வி.பி., தலைவர் அனுரா திசநாயகே, (தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் ) காலை நிலவரப்படி 51 சதவீதம் ஓட்டுகளுடன் முன்னணியில் இருந்தார். ஆனால் நண்பகல் 12 மணிக்கு மேல் இவரது ஓட்டு 40 சதவீதமாக சரிந்தது.
சஜித் பிரேமதாசா இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்கே 3வது இடத்திலும், அரியநேத்திரன் 4வது இடத்திலும், நமல் ராஜபக்சே 5வது இடத்திலும் உள்ளனர்.
தெற்காசியாவில், இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கைத்தீவு, மேற்கு நாடுகளுக்கு செல்லும் கடல் வழியில் அமைந்துள்ளது. இந்தியாவுக்கு அருகே அமைந்திருப்பதாலும், இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் இருப்பதாலும், சீனாவும் தளம் அமைக்க ஆர்வம் காட்டும் நாடாக இலங்கை உள்ளது.
இப்படி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, 30 ஆண்டுக்கும் மேலாக உள்நாட்டுப் போரில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிந்த பிறகு, பேராசை பிடித்த ராஜபக்சே குடும்பத்தினரால் நாடு சந்தித்த சிரமங்கள் ஏராளம்.
அவற்றை கடந்து, இப்போது புதிய தேர்தலை நடத்தி முடித்துள்ளது இலங்கை. தற்போதைய அதிபர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் பின்புலம் கொண்ட தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் இடையே முக்கிய போட்டி நிலவியது.
இதில், தற்போதைய நிலவரப்படி அனுரா குமார திசநாயகே, 40 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளார். இன்று மதியத்திற்குள் உறுதியான நிலவரம் தெரியும் வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓட்டு பெற்றால் மட்டுமே, அதிபராக தேர்வு செய்யப்படுவார்.