இலங்கை: எண்ணிக்கை அதிகரிப்பு… இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
இவ்வருட ஆரம்பம் முதல் தற்போது வரை நாட்டில் 30,663 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 12 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கொழும்பு(Colombo) மாவட்டத்திலிருந்து இதுவரை 7,119 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அதிகளவான டெங்கு நோயாளர்கள் அங்கேயே பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம்(Jaffna) மாவட்டத்திலிருந்து 4,004 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 3,199 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 1,690 டெங்கு நோயாளர்களும், கண்டி(Kandy) மாவட்டத்திலிருந்து 2,484 டெங்கு நோயாளர்களும், குருணாகல்(Kurunegala) மாவட்டத்திலிருந்து 1,321 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும், நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவுவதால், டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைய பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுப்புறச் சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.