May 27, 2024

மகாமாரியம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா

சீர்காழி தென்பாதி பிரதான சாலையில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதன்பின் தினமும் இரவு அம்மன் கோயிலில் உள்வீதி உலா நடைபெற்றது. தீமிதி திருவிழாவையொட்டி உப்பனாற்று கரையில் இருந்து பால்குடம், பால்காவடி, அழகர் காவடி, பறவை காவடி புறப்பாடு நடந்தது.

முன்னதாக மேள தாளங்கள் முழங்க ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு பால், பனீர், இளநீர், பஞ்சாமிர்தம், பழங்கள், புஷ்பம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, இரவில் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீபத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மறையூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் கரகம், காவடி, பால்குடம் தீமிதி திருவிழா கடந்த 2-ம் தேதி பந்தல்கால் முகூர்த்தத்துடன் துவங்கியது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள், செல்லியம்மன் கும்ப பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம், தீமிதி திருவிழா நடந்தது.

முன்னதாக, கங்கணம் கட்டி விரதம் இருந்த பக்தர்கள், மறையூர் அகஸ்தீஸ்வரர் கோயில் முக்கிய வீதிகளில் இருந்து வாணவேடிக்கை, மேளதாளம், முட்டி கரகம், கூண்டு காவடி, அலகு காவடி, பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர்.

பின்னர் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மகாமாரியம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை மறையூர் கிராம மக்கள், குல தெய்வங்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும், இரவில் அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!