மும்பை: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, தானேவில் உள்ள ‘நிதான்’ முதியோர் நலவாழ்வு மையத்தில் தங்கியிருக்கும் நிலையில், அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில் பேசிய வினோத் காம்ப்ளி, நிதான் மையத்தில் தனக்கு நல்ல பராமரிப்பும் அன்பும் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். அங்கு வழங்கப்படும் சுகாதாரம் மற்றும் வசதிகளையும் அவர் பாராட்டியுள்ளார்.
“இங்கு கிடைக்கும் அன்பால் நான் வீட்டை விட்டு இருப்பது போல் உணரவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
வீடியோவில் அவர் சற்று சிரமத்துடன் பேசியதுடன், இறுதியில் கைகளை கூப்பி நன்றி தெரிவித்த காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் வினோத் காம்ப்ளி விரைவில் நலம்பெற்று மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட்டில் மறக்க முடியாத சாதனை
வினோத் காம்ப்ளி இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,084 ரன்களையும், 104 ஒருநாள் போட்டிகளில் 2,477 ரன்களையும் குவித்துள்ளார்.
குறிப்பாக இளம் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நினைவில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
தற்போது தானேவில் உள்ள நிதான் முதியோர் நலவாழ்வு மையத்தில் தங்கியிருக்கும் அவர், அங்கு தனக்கு கிடைக்கும் பராமரிப்பை நேரடியாக வீடியோவில் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
