கொழும்பு: 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று கொழும்பில் தொடங்கியது. ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற டாஸில் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா வெற்றி பெற்று, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனால் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கிற்கு இறங்கியது.
பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா கூறுகையில், “ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. அதனால் பந்துவீச்சு எங்களுக்கு சாதகமாக இருக்கும். 250 ரன்களுக்குள் எந்த இலக்கையும் துரத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது” என்றார். கொழும்பு மைதானத்தில் மாலையில் பனிப்பொழிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், சேஸிங் செய்வது பாகிஸ்தானுக்கு சிறந்த முடிவாக கருதப்படுகிறது.

இதற்கிடையில், இந்திய அணியில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், “அமன்ஜோத் கவுருக்கு உடல்நிலை சரியில்லாததால், அனுபவம் வாய்ந்த ரேணுகா சிங் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்” என்றார். இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கொழும்பு மைதானத்தில் வெப்பநிலை 31 டிகிரியாக இருந்தாலும், அதிக ஈரப்பதம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சவாலான சூழல் நிலவுகிறது. வானிலை தெளிவாக இருந்தாலும், மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் போட்டியின் முடிவில் பதற்றம் நிலவுகிறது.
இந்திய அணியின் பிளேயிங் XI:
பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, ரேணுகா சிங் தாக்கூர், கிராந்தி கௌட், ஸ்ரீ சரணி.
பாகிஸ்தான் அணியின் பிளேயிங் XI:
முனீபா அலி, சதாஃப் ஷமாஸ், சித்ரா அமீன், ரமீன் ஷமீம், அலியா ரியாஸ், சித்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர்), பாத்திமா சனா (கேப்டன்), நடாலியா பர்வைஸ், டயானா பெய்க், நஷ்ரா சந்து, சாடியா இக்பால்.