ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியது. ஜோகன்னஸ்பர்க்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டி மழையால் 47 ஓவர்களில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப் அதிகபட்சமாக 94 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் உட்பட 101 ரன்கள் எடுத்தார்.
இது அவரது 3-வது சதம். பாபர் அசாம் 52, கேப்டன் முகமது ரிஸ்வான் 53, சல்மான் ஆகா 48 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்கோ ஜான்சென் மற்றும் பிஜோர்ன் ஃபோர்டுய்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற திருத்தப்பட்ட இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா 42 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் உட்பட 81 ரன்கள் எடுத்தார்.
கோர்பின் போஷ் 40, ராஸி வான் டெர் டஸ்ஸன் 35, டோனி டி ஜோர்ஜி 26, மார்கோ ஜான்சன் 26 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் சூபியான் முகீம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்திலும் அந்த அணி வெற்றி பெற்றது.
முன்னதாக இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை தென்னாப்பிரிக்கா 2-0 என கைப்பற்றியது. குறுகிய வடிவிலான தொடருக்குப் பிறகு, இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி வரும் 26-ம் தேதி செஞ்சுரியனில் துவங்குகிறது.