வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு அடுத்த ஆண்டு இந்தியாவில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெரிய வர்த்தக குழுவை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மில்வாகீ நகரில் நடைபெறும் ஜி20 வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள கோயல், அமெரிக்க தொழில்துறை பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தகவலை வெளியிட்டார்.
இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு
அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று கோயல் கேட்டுக்கொண்டார். குறிப்பாக இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் இரு நாடுகளின் பொருளாதாரத்துக்கும் பயன் ஏற்படும் என்றார்.
வலுவான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல், நவீன உற்பத்தித் துறையில் முதலீடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பல நாடுகளின் அமைச்சர்களுடன் பேச்சு
ஜி20 கூட்டத்துக்கு இடையே பிரான்ஸ், கனடா, சவுதி அரேபியா, தென்கொரியா ஆகிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களையும் கோயல் சந்தித்து இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான விவகாரங்களை விவாதித்தார்.
அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பல துறைகளைச் சேர்ந்த வர்த்தக பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
